பிரதமர் நரேந்திர மோடி இன்று (30.09.2021) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'சிபெட்: பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை காணொளி வாயிலாக திறந்துவைத்தார். மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பேசிய நரேந்திர மோடி, புதிய தேசிய சுகாதாரக் கொள்கையில் இந்தியா பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி பேசியது வருமாறு:
இந்த (கரோனா) தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள சுகாதாரத்துறைக்கு நிறைய கற்றுதந்தது. ஒவ்வொரு நாடும் இந்த நெருக்கடியை தங்களது வழியில் கையாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில் இந்தியா தனது வலிமையையும், சுயசார்பையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நாட்டின் சுகாதாரத்துறையை மாற்றுவதற்கு ஒரு புதிய தேசிய சுகாதாரக் கொள்கையில் நாம் பணியாற்றிவருகிறோம். ஸ்வச் பாரத் அபியான், ஆயுஷ்மான் பாரத் மற்றும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் போன்றவை இதன் ஒரு பகுதியாகும்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சுகாதார சேவைகளை விரிவுபடுத்த உதவி செய்யும். நல்ல மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை ஒரு கிளிக்கில் அணுகலாம். இது நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
சுகாதாரத்துறையுடன் இணைந்துள்ள திறமையான மனிதவளத்தின் தாக்கம், சுகாதார சேவைகளில் காணப்படுகிறது. தொற்றுநோய் பரவலின்போது அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி நடத்திவருகிறது. இன்று இந்தியா 88 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.