பரிக்ஷா பே சர்ச்சா 2.0 என்ற தலைப்பில் தேர்வு எழுதும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். டெல்லி தட்கோடோரா மைதானத்தில் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களும் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் தேர்வு பயம், எதிர்காலம் பற்றிய திட்டங்கள் என பலவகையான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்பொழுது பேசிய ஒரு மாணவரின் தாய் தனது மகன் எப்பொழுதும் ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டே படிப்பதில்லை என கூறினார்.
இதனை கேட்டு சிரித்துக்கொண்டே பப்ஜி யா? என மோடி கேட்க அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது. மேலும் அது குறித்து பேசிய மோடி, 'நம் குழந்தைகளிடம் இருந்து தொழில்நுட்பத்தை பிரிப்பதால் அவர்களை இந்த உலகத்திலிருந்தே பிரிக்கிறோம். அவர்கள், எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அதனை சரியான முறையில் ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறார்களா, என்பதை கவனிக்க வேண்டும். பெற்றோர் அனைவரும் வீட்டில் சாதாரணமாக தொழில்நுட்பத்தை பற்றி பேசுங்கள். அப்போதுதான் குழந்தைகள் தங்கள் கருத்துக்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். நான் இப்போது பேசுகொண்டிருக்கும்போதே அதனை கவனிக்காமல் மோடியுடன் இருக்கிறேன் என ஸ்டேட்டஸ் போடுபவர்களும் இங்கு இருக்கிறார்கள் என கூறினார். மோடியின் இந்த பதிலுக்கு அரங்கம் முழுவதும் உள்ள மாணவர்களும் பெற்றோரும் பலத்த சிரிப்பையும், கைத்தட்டலையும் வெளிப்படுத்தினர்.