நாடு முழுவதும் 6 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மே 19 ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட முயன்றார். ஆனால் அவரால் எந்த சாதனையையும் செய்ய முடியவில்லை. அதனால் தான் ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் எதிர்க்கட்சி தலைவர்களை திட்டியும், குற்றம்சாட்டியும் பேசி வருகிறார். பிராந்திய கட்சிகள் இணைந்து அரசு அமைப்பதில் கட்சிகளிடையே எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. அது ஒற்றுமையை குலைத்துவிடும். தேர்தல் முடிவுக்கு பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் (பிரதமர் பதவி) ஒருமித்த முடிவை எடுப்போம்.
ஆந்திராவில் 35 தொகுதிகள் மட்டுமே உள்ளன. இது மிகவும் குறைவு. எனவே நான் பிரதமர் போட்டியில் இல்லை, மற்றவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். ராகுல் காந்தி சிறந்த தலைவர். அவர் மோடி போல இல்லாமல் நாட்டின் நலனில் அக்கறை காட்டுகிறார். மோடி யார் சொல்வதையும் கேட்பதில்லை, மற்றவர்களை மிரட்டியே ஆட்சி செய்ய நினைக்கிறார். 1996 ல் மூன்றாது அணி அமைத்த போது காங்கிரஸ் கட்சியை வெளியில் வைத்தோம். பின்னர் காங்கிரஸ் ஆதரவை விலக்கியதால் ஆட்சி கலைந்தது. இந்த முறை அதுபோல நடக்காமல் நிலையான ஆட்சி அமையும்" என தெரிவித்துள்ளார்.