கடந்தமாதம் ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பேசிய துருக்கி ஜனாதிபதி எர்டோகன், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து அங்கு மக்கள் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, இந்த ஆண்டு கடைசியில் துருக்கி செல்ல திட்டமிட்டிருந்த மோடி, தனது பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அத்துடன், துருக்கியின் அனடோலு கப்பல்கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்கு 45 ஆயிரம் டன் கப்பல் கட்டுவதற்காக அனுமதித்திருந்த டெண்டரையும் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து விவகாரத்தில் முக்கிய நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக மோடி அரசு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு பல்வேறு பலன்களை வாரி வழங்குவதாக புகார்கள் எழுந்திருக்கும் நிலையில் துருக்கியை புறக்கணிக்கும் முடிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.