கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளன. அதில் பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 80 உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு 38 உறுப்பினர்களும் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் இருந்த போதிலும் முதல்வர் பதவியை கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு விட்டு கொடுத்தது. இதனால் அம்மாநிலத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற நாள் முதல் கூட்டணியில் சலசலப்பு நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் மாநில அமைச்சரவையில் இடம் பெறாத காரணத்தால், அவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் அரசுக்கு அடிக்கடி நெருக்கடிகள் தருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக கட்சி அபார வெற்றி பெற்றது. ஆளும் ம.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமாரை சந்திக்க ம.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்துள்ளன. இவர்கள் 13 பேரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரை தொடர்ந்து கர்நாடக ஆளுநரை இந்த எம்.எல்.ஏக்கள் சந்திக்கவுள்ளதாக தகவல் கூறுகின்றன. இதனால் கர்நாடக மாநில அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலை கருதி முதல்வர் குமாரசாமி அமெரிக்காவில் இருந்து அவசரமாக இன்று இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.