மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் (71) ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் இன்று உயிரிழந்தார். குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும், மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் ஆவர். இந்நிலையில், அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இது ஒரு சோகமான நாள். அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அகமது படேல் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அகமது படேல் அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். பொதுச் சேவைக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் அகமது படேல். தனது கூர்மையான அறிவிற்காகப் போற்றப்பட்டவர். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதில் அவரது பங்கு நினைவு கூறத்தக்கது. அவரது மகனிடம் பேசி எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.