பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி்யில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக்குழு ஆலோசனை கூட்டத்தில் நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜே.பி.நட்டா, பாஜகவின் செயல்தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘’பாஜகவின் தேசியதலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆனதால் தான் வகித்து வந்த தலைவர் பொறுப்பை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜகவின் பல மாநில தேர்தல் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் அமித்ஷா. அவரே தலைவராக தொடர்கிறார். அமித்ஷாவின் பணிகளை பகிர்ந்துகொண்டு செயல்பட, ஜே.பி.நட்டா செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்’’என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். காரரான நட்டா, நிர்வாகத் திறமை கொண்டவர். ஏபிவிபி மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நட்டா, 2010ம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராஜ்யசபாவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.