Skip to main content

போராட்டத்தை கை விடும் விவசாயிகள்? - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

farmers

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு வருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

 

இந்தச் சூழலில் மத்திய அரசு விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்து, போராட்டத்தை திரும்ப பெறுமாறு வலியறுத்தியது. இருப்பினும் போராட்டத்தை திரும்ப பெற்ற பிறகே வழக்குகள் திரும்ப பெறப்படும் என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவாதத்தில் இருந்த முன்மொழிவுகளை விவசாயிகள் ஏற்கவில்லை.

 

இதனையடுத்து அந்த முன்மொழிவுகளில் சில மாற்றங்களை செய்து, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி திருத்தப்பட்ட முன்மொழிவுகளை ஏற்குமாறு வலியுறுத்தினர். இதனைதொடர்ந்து மத்திய அரசு தான் முதலில் அனுப்பிய முன்மொழிவுகளில் மாற்றம் செய்து மீண்டும் விவசாயிகளுக்கு அனுப்பியுள்ளது.

 

அதில் விவசாயிகளின் மேல் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அரசுகளும் விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்ப பெற ஒத்துக்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தநிலையில் மத்திய அரசின் அளித்த திருத்தப்பட்ட முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, திருத்தப்பட்ட முன்மொழிவுகள் குறித்து அரசாங்கத்தின் லெட்டர்ஹெட்டில் கையொப்பத்தோடு கூடிய முறையான தகவல்தொடர்புக்காக காத்திருப்பதாகவும், சிங்கு எல்லையில் நண்பகல் 12 மணிக்கு கூடவுள்ள கூட்டத்தில் போராட்டத்தை திரும்ப பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

 

இதன்காரணமாக இன்று விவசாயிகள் தங்களது போராட்டத்தை நிறைவு செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்