ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தவர்களை, காவல்நிலையத்தில் இருந்து இழுத்து வந்து பொதுமக்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் நம்கோ மிஷிமி கிராமத்தில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி காணாமல் போனார். ஐந்து நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் சிறுமி பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சஞ்சய் சோபோர் மற்றும் ஜக்தீஸ் லோகர் ஆகிய இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். லோகர் தனது வாக்குமூலத்தில் சோபர்தான் குழந்தையைக் கற்பழித்தான் எனக் கூறியிருந்தான். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டெஜூ காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், காவல்நிலையத்தைத் தாக்கிவிட்டு, லோகர் மற்றும் சோபர் ஆகிய இருவரை வெளியே இழுத்து வந்து பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அந்த இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களது உடலுக்கு தீயிட்டு பொதுமக்கள் கொண்டாடியுள்ளனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 20ஆம் தேதி அருணாச்சலப்பிரதேசத்தில் ‘மாநில நாள்’ கொண்டாடப்படும். அதேநாளில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், மாநில நாளுக்கான மகத்தான பரிசு என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், ‘சட்டம் ஒழுங்கைக் கையாள அரசியலமைச் சட்டம் இருக்கும்போது, பொதுமக்களே அதை கையிலெடுப்பது முறையாகாது. சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என அம்மாநில முதல்வர் பீமா கண்டு தெரிவித்துள்ளார்.