கர்நாடகாவில் வரும் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பிரதமர் மோடி இன்று 3 மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று மைசூரில் உள்ள சாம்ராஜநகரம் மாவட்டத்தின் சாந்தமாரஹள்ளி பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சவால் விட்டு பேசியபோது...."கர்நாடக மாநிலத்தில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சி ஊழலில் மூழ்கிப்போய் கிடக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் மாநில மக்களை வந்தடையாதவாறு இந்த அரசு தடுக்கிறது. அந்த கட்சிக்கு தலைமை தாங்குபவர்களுக்கு இந்த நாட்டின் வரலாறு, பாரம்பரியம் தெரியவில்லை.
கர்நாடகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வெறும் அலை மட்டுமல்ல, பெரும் சூறாவளியே வீசுகிறது. பாராளுமன்றத்தில் என்னை 15 நிமிடம் பேச அனுமதித்தால் மோடி ஓடிப்போய் விடுவார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.அவர் 15 நிமிடம் பேசுவது என்பதே பெரிய காரியம். அதை நான் கேட்டால் என்னால் அங்கு உட்காரவே முடியாது. அட என்னடா, இது... என்றாகிவிடும். திரு.காங்கிரஸ் தலைவர் அவர்களே, நீங்கள் புகழுக்குரியவர். நான் சாதாரணமான தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவன். உங்களுக்கு முன்னால் அமர எங்களுக்கு அருகதை கிடையாது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் சாதனை பற்றி காகிதத்தில் எழுதி வைத்துள்ள குறிப்புகளை படிக்காமல் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ அல்லது உங்கள் அம்மாவின் தாய்மொழியிலோ உங்களால் 15 நிமிடங்கள் தொடர்ந்து பேச முடியுமா... சவால் விடுகிறேன்" என்றார்.