இந்தியாவில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 55 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் 40 ஆயிரம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. கேரளாவில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்ட வயநாட்டிலும் கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேரளாவில் 40,000 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட பிறகும் கரோனா உறுதியானதையடுத்து, அவ்வாறு பாதிக்கப்பட்ட 200 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.