வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 11.23 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பெரும்பாலான நாடுகளில் சர்வதேச விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களது உறவினர்கள் வைத்த கோரிக்கை காரணமாக 'வந்தே பாரத்' எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் பிற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் இந்த திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தா இது பற்றி கூறும்போது, "வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மொத்தம் 11.23 லட்சம் இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் 22 நாடுகளில் வசித்தவர்கள். 500 சர்வதேச விமானங்கள் மற்றும் 130 உள்நாட்டு விமானங்கள் ஐந்தாம் கட்டத்தில் இயக்கப்பட்டுள்ளன" என்றார்.
இத்திட்டத்தின் ஆறாம் கட்ட நடவடிக்கையானது செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது எனக் கூறப்படுகிறது.