புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்வதில்லை, அதனால் திட்டங்கள் காலதாமதமாக நடப்பதாகவும் கூறி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியதுடன், மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று புதுச்சேரி தலைமைச் செயலகம் முன்பு எம்.எல்.ஏ நேரு தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு சென்ற கிழக்கு எஸ்.பி சுவாதி சிங், பெரியகடை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்க மறுத்த நிலையில் தலைமைச் செயலரின் தனிச் செயலாளர் நேரில் வந்து போராட்டக் குழுவுடன் பேசினார். ஆனால் 'தலைமைச் செயலாளர் நேரில் வந்து ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஆய்வு தொடர்பாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்' எனக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். பேச்சுவார்த்தை நடத்த தனிச் செயலாளரிடம் போராட்டக் குழுவினர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரி உறுதிமொழி அளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்
அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற சுயேச்சை எம்.எல்.ஏ நேரு, தலைமைச் செயலாளர் அங்கு இல்லாததால் கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் பங்கேற்று இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார். எம்.எல்.ஏ வருவதை வாக்கி டாக்கி மூலம் உயர் அதிகாரிகள் பாதுகாப்பில் இருந்த போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் விழா நடக்கும் அரங்கின் வாயில் கதவை போலீசார் இழுத்து பூட்டினர். அப்போது அங்கு சென்ற எம்.எல்.ஏ, தன்னை உள்ளே அனுமதிக்குமாறு போலீஸிடம் கூறினார். அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காததால் 8 அடி உயரம் உள்ள கேட்டின் மீது ஏறி எம்.எல்.ஏ நேரு உள்ளே குதித்தார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இதேபோன்று உள்ளே சென்றனர். உள்ளே சென்ற எம்.எல்.ஏ நிகழ்ச்சியின் மேடையில் இருந்த தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளைக் கடுமையான வார்த்தைகளால் வசை பாடினார்.
“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுத்த நிதியை கொண்டு நகரை சுத்தம் செய்யாமல் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் என்ன பயன்? ஊரெல்லாம் நாறிக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தவில்லை. தலைமைச் செயலாளர் தான் அதற்கு சேர்மன். உப்பனாறு எங்கே இருக்கிறது ஒரு முறையாவது வந்து பார்த்திருக்கிறீர்களா? சாக்கடை ஓரத்தில் சுகாதாரமின்றி வாழும் மக்களுக்கு சுவாச கோளாறு புற்றுநோய் ஏற்படுகிறது” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் எம்.எல்.ஏ மற்றும் அவர் ஆதரவாளர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.