அசாம், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை நிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.07.2021) மிசோரம் மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்த எட்டு விவசாயிகளின் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இது திங்கட்கிழமை கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் காவல்துறையினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இந்தக் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஐந்து அசாம் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அசாம் - மிசோரம் எல்லையிலிருந்து இரு மாநில காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டு, மத்திய துணை இராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கலவரம் தொடர்பாக அண்மையில் மத்திய உள்துறைச் செயலாளர், இரு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை டி.ஜி.பிக்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் மிசோரம் போலீசார், அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது கொலை முயற்சி, குற்றச்சதியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசாம் முதல்வர் மீது மட்டுமின்றி, அசாம் மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரல், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், போலீஸ் சூப்பிரண்டு, கச்சார் மாவட்ட துணை கமிஷனர் ஆகியோர் மீதும், பெயர் குறிப்பிடப்படாத 200 காவல்துறையினர் மீதும் இந்தக் கொலை முயற்சி, குற்றச்சதியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.