இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படும். இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூபாய் 200 மானியம் வழங்கப்படும். ஒரு ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டருக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும். சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும். சிமெண்ட் விலையைக் குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.