தமிழகம் உட்பட 17 மாநிலங்களுக்கு, வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த மாநிலங்கள் பெறும் மானியத்தின் அளவை, நிதி ஆணையம் முடிவு செய்கிறது. ஒரு மாநிலத்தின் வருவாய் மதிப்பீடு மற்றும் செலவு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி அடிப்படையில் இந்த மானியம் பரிந்துரைக்கப்படுகிறது.
இதில் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பகிர்வு மதிப்பீட்டை நிதி ஆணையம் கணக்கில் எடுத்துக் கொண்டு, 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூபாய் 1,18,452 கோடி வழங்க பரிந்துரை செய்தது. இந்த மானியம் 12 மாத தவணைகளாக மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியத்தின் மூன்றாவது தவணையாக ரூபாய் 9,871 கோடியை விடுவித்துள்ளது மத்திய நிதியமைச்சகம். இதில் தமிழகத்துக்கு மூன்றாவது தவணையாக ரூபாய் 183.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் மொத்தமாக ரூபாய் 551.01 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு மூன்றாவது தவணையாக ரூபாய் 1,657.58 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் மொத்தமாக ரூபாய் 4,972.74 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மேற்குவங்க மாநிலத்திற்கு மூன்றாவது தவணையாக ரூபாய் 1,467.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.