உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மேலும், நேற்று (12.10.2021) உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவுடன் சேர்த்து இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் சரணடைய விரும்புவதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்றத்திலும் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது குறித்து கேள்வியெழுப்பட்டுள்ளது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஹார்வர்ட் கென்னடி ஸ்கூலில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமனிடம், லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது குறித்து பிரதமரோ, மூத்த அமைச்சர்களோ எதுவும் கூறாது ஏன் எனவும், யாராவது இதுகுறித்து கேள்விகேட்டால் ஏன் தற்காத்துக் கொள்ளும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது; இல்லை..கண்டிப்பாக இல்லை. முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒரு சம்பவத்தை நீங்கள் எழுப்பியுள்ளீர்கள். மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதுதான் எனது கவலை.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெறுகின்றன. நீங்களும், டாக்டர் அமர்த்தியா சென் உள்ளிட்ட மற்றவர்களும், இந்தியாவை அறிந்தவர்களும் பாஜக சம்மந்தப்பட்டுள்ளபோது மட்டும் அந்த பிரச்சனைகளை எழுப்பாமல், பிரச்சனைகள் நடக்கும் ஒவ்வொரு முறையும் அதை எழுப்ப வேண்டும் என விரும்புகிறேன். எனது அமைச்சரவை சகாவின் மகன் அநேகமாகப் பிரச்சனையில் இருக்கக்கூடும். அவர்கள்தான் (மத்திய இணையமைச்சரின் மகன் உள்ளிட்டோர்) அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், வேறு யாரும் அதைச் செய்யவில்லை எனக் கருதப்படுகிறது. அதை நிறுவச் சட்டம் ஒரு முழுமையான விசாரணை செயல்முறையைக் கொண்டிருக்கும்.
இது எனது கட்சி அல்லது பிரதமரைப் பாதுகாக்கச் சொல்லவில்லை. இந்தியாவின் தற்காப்புக்காகக் கூறுகிறேன். நான் இந்தியாவிற்காகப் பேசுவேன். ஏழைகளுக்கு நீதி கிடைக்கப் பேசுவேன். நான் அதைக் கேலி செய்யமாட்டேன் . நான் கேலி செய்தேன் என்றால், "உண்மைகளைப் பேசுவோம்" எனத் தற்காப்புக்காக கூறியிருப்பேன். இதுதான் உங்களுக்கு என்னுடைய பதில்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.