Skip to main content

"எனது அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது" - அமித்ஷாவிற்குக் கடிதம் எழுதிய மிசோரம் முதல்வர்!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021


 

MIZORAM CM

 

மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர்   ஜோரம்தாங்கா முதல்வராக இருந்து வருகிறார். இந்தசூழலில் சமீபத்தில் மிசோரம் மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்த அதிகாரியின் பதவிக்காலம் முடிவடைந்தது.

 

இதனையடுத்து முதல்வர்  ஜோரம்தாங்கா, கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜே.சி.ராம்தங்கா என்பவரை புதிய தலைமை செயலாளராக நியமிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகமோ ரேணு சர்மா என்பவரை புதிய தலைமை செயலாளராக நியமித்து, அவர் வரும் நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்த அப்பொறுப்பினை வகிப்பார் என அக்டோபர் 28 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதேநேரத்தில் அதே அக்டோபர் 28 ஆம் தேதி ராம்தங்கா நவம்பர் ஒன்று முதல் தலைமை செயலாளராக பொறுப்பேற்பார் என மிசோரம் அரசு உத்தரவு பிறப்பித்தது.

 

இதனால் தற்போது மிசோரத்தில் இரண்டு தலைமை செயலாளர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரேணு சர்மாவுக்கு மிசோ மொழியறிவு இல்லை என்பதால் அவரை மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர்  ஜோரம்தாங்கா கடிதம் எழுதியுள்ளார்.

 

ஜோரம்தாங்கா அமித்ஷாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பெரும்பலான மிசோ மக்களுக்கு இந்தி புரியாது. என்னுடைய கேபினட் அமைச்சர்கள் யாருக்கும் இந்தி புரியாது. அவர்களில் சிலருக்கு ஆங்கில மொழியிலேயே பிரச்சனைகள் உள்ளன. இத்தகைய பின்னணியில், மிசோ மொழியறிவு இல்லாத நபர் ஒரு போதும் திறமையான, செயல்திறன் மிக்க தலைமைச் செயலாளராக இருக்க மாட்டார்.

 

இந்த உண்மையின் காரணமாக, மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து மிசோ மொழியறிவு இல்லாத ஒருவரை இந்திய அரசு ஒருபோதும் தலைமைச் செயலாளராக நியமித்தில்லை. அது காங்கிரஸ் கூட்டணி அரசாக இருந்தாலும் சரி, பாஜக கூட்டணி அரசாக இருந்தாலும் சரி. மிசோரம் மாநிலம் உருவானதில் இருந்தே இதே நடைமுறைதான் உள்ளது .இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அந்தந்த மாநிலத்தின் அடிப்படை மொழி தெரியாத நபர் தலைமை செயலாளராக நியமிக்கப்படுவதில்லை.

 

வடகிழக்கு மாநிலங்களில் நான் மட்டும்தான், ஆரம்பம் முதல் இன்றுவரை பாஜக கூட்டணிக்கு விசுவாசமான தோழனாக இருந்து வருகிறேன். எனவே பாஜக கூட்டணியுடனான இந்த விசுவாசமான நட்புக்காக நான் ஒரு சிறப்பு அனுகூலத்திற்கும் பரிசீலனைக்கும் தகுதியானவன் என்று நம்புகிறேன். ஒருவேலை தலைமை செயலாளர் குறித்த எனது முன்மொழிவு மறுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியும் மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உண்மையாகச் சேவை செய்ததற்காக என்னை கேலி செய்யும். எனவே, இந்த உத்தரவை மாற்றியமைத்து, எனது முன்மொழிவை தயவுகூர்ந்து ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

இவ்வாறு  ஜோரம்தாங்கா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பரபரப்பான அரசியல் சூழல்; ஹரியானாவில் புதிய முதல்வர் பதவியேற்பு! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
A turbulent political environment; New Chief Minister sworn in in Haryana!

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதால், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். மொத்தம் 90 சட்டமன்ற இடங்களைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.க வெறும் 40 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதனால், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜனநாயக் ஜனதா கட்சியுன் கூட்டணியை உருவாக்கி பா.ஜ.க. ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. அதில், பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அதே சமயம் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன் நேற்று (11-03-2024) ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், மக்களவைத் தேர்தல் வருவதற்கு முன்பாகவே ஜனநாயக் ஜனதா கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியது.

அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் குருசேத்ரா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவருமான நயாப் சைனி பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதியதாக அமைய உள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உடன் ஹரியானா லோகித் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தர உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயாப் சைனி ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா, முதல்வராகப் பதவியேற்க நயாப் சைனிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

A turbulent political environment; New Chief Minister sworn in in Haryana!

இந்நிலையில் நயாப் சிங் சைனி சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஹரியானா முதல்வராகப் பதவியேற்றார். நயாப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பாஜக மூத்த தலைவர்களான ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரிலால், மூல்சந்த் சர்மா, கன்வர் பால் குஜ்ஜர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சித் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டரும் கலந்து கொண்டார். மேலும் மனோகர் லால் கட்டார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.