கோவா மாநிலத்தில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கோவா மாநிலத்தின் ஆளுங்கட்சியாக பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் மைக்கேல் லோபோ தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் கட்சியிலிருந்தும் விலகியுள்ளார். அண்மையில் பாஜகவில் இருந்து இரண்டு கிறிஸ்துவ எம்.எல்.ஏ.க்கள் விலகிய நிலையில், மூன்றாவது கிறிஸ்துவ எம்.எல்.ஏ.வாக மைக்கேல் லோபோ கட்சியிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் லோபோவின் விலகல், கோவா மாநிலத்தின் ஆறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மைக்கேல் லோபோ விலகியிருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ.வான பிரவின் ஜான்டியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால், பிரவின் ஜான்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.