வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு கொடுத்த பள்ளிக்கூடத்தை அவர்கள் சுத்தம் செய்து பெயிண்ட் அடித்து கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பல்சானா பகுதியில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 52 தொழிலாளர்கள் அங்கு தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அந்த தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமலும், தங்கள் மாநிலத்துக்கு செல்ல வாகனங்கள் ஏதுமின்றியும் கஷ்டப்பட்டுள்ளனர். இந்த செய்தி ராஜஸ்தான் மாநில அரசுக்கு கிராம தலைவர் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் பணியாற்றிய ஊரில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில், அவர்களை தங்க வைத்து அவர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். கடந்த 15 நாட்களுக்கு மேலாக அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்கு அந்த பள்ளி பாழடைந்து கிடைப்பதை சரிசெய்தால் என்ன என்ற எண்ணம் வந்துள்ளது. இதுதொடர்பாக கிராம தலைவரை அழைத்து அவரிடம் விஷயத்தை கூறியுள்ளனர். அவரும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க கொஞ்சம் வெயிண்ட் வாங்கி கொடுத்தால், இந்த இடத்தை சரிசெய்து, பெயிண்ட் அடித்து கொடுத்து விடுவோம் என்று கூறியுள்ளனர். அவரும் வாங்கி கொடுக்கவே, ஒரே வாரத்தில் அந்த பள்ளியை புது கட்டிடம்போல் தற்போது தொழிலாளர்கள் மாற்றியுள்ளனர். சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் வந்து பாராட்டியுள்ளார்.