உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் திறந்த லாரிகளில் போட்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து லாரி மூலமாக உத்தரப்பிரதேசம் வழியாகத் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஒரியா மாவட்டம், மிஹாலி அருகே தொழிலாளர்களின் லாரி பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த தொழிலாளர்களில் 26 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் இந்த விபத்தில் பலியான ஜார்க்கண்டைச் சேர்ந்த 11 பேரின் உடல்களை உத்தரப்பிரதேச அரசு அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மரியாதையை அளிக்காமல் பலியானவர்களின் உடல்களைத் திறந்த லாரியில் கருப்பு தார்பாய் மூலம் மூடி அனுப்பி வைத்துள்ளதாக ஜார்க்கண்ட் அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களோடு காயமடைந்த தொழிலாளர்களும் அதே லாரியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், "மனிதத்தன்மையில்லாத இந்தச் செயலை உத்தரப்பிரதேச அரசு தவிர்த்திருக்க வேண்டும். உடல்களை மாநில எல்லை வரை உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார். இதனை அடுத்து லாரியில் இருந்து உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜார்க்கண்ட்டில் உள்ள அவர்களது வீடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.