நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.
இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.