நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை தள்ளிபோவதற்கு டெல்லி ஆளும் அரசான ஆம் ஆத்மியை விமர்சித்த பிரகாஷ் ஜவடேகர், ஸ்ம்ரிதி இரானி கருத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் இந்த தண்டனையை உறுதி செய்தன. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஸ்ம்ரிதி இரானி கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ள பதிலில், "குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்து, குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் முயற்சிக்க வேண்டும். பிரகாஷ் ஜவடேகர் ஏதோ சொன்னார், ஸ்ம்ரிதி இரானி ஏதோ சொன்னார் ... ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதால் எந்த நன்மையும் வராது. குற்றம் நடந்த 6 மாதங்களுக்குள் பாலியல் வன்புணர்வு செய்தவர்களை தூக்கிலிடப்படும் ஒரு அமைப்பை நாம் உருவாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.