தெலுங்கானாவில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோர்களே அடித்து கொலை செய்து, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலை நீரோடையில் கரைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சிரியலா மாவட்டத்திலுள்ள தலமடுகு என்ற கிராமத்தை சேர்ந்த அனுராதா என்ற 22 வயது பெண், அதே ஊரை சேர்ந்த லட்சுமி ராஜன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனுராதாவின் பெற்றோர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இரண்டு வருடங்களாக காதலித்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி அனுராதா லட்சுமி ராஜனை கடந்த 3ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அனுராதாவை அவரது கணவரிடம் இருந்து அவரது தந்தை பிரித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அனுராதாவின் தந்தையும், அவரது சகோதரரும் அனுராதை அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டு அவரின் உடலை தீயிட்டு எரித்து சாம்பலை அருகில் உள்ள நீர்நிலையில் கரைத்துள்ளனர். இதுகுறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் அனுராதாவின் தந்தை நடந்தது அனைத்தும் உண்மை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து அனுராதாவின் தந்தை, சகோதரரை போலிஸார் கைது செய்துள்ளனர். தமது பெற்றோர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் தனது பெற்றோரே காரணம் என்றும் அனுராதா ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனவே வலுவான இந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைதானவர்களிடம் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இந்த திட்டமிட்ட கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடைபெற்று வருகிறது.
தெலங்கானாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அம்ருதா என்பவர் காதல் திருமணம் செய்ததால் கூலிப்படையினரால் அவரது கணவர் பிரனய் என்பவரை நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.