கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுவரும் கேரளாவில் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்துவது குறித்த அம்மாநில அரசின் முடிவில் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 17,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,800 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் இந்தக் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளில் இன்று முதல் ஊரடங்கு ஒருசில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் உணவகங்கள், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பெரும்பாலான சேவைகளைச் சில முக்கியக் கட்டுப்பாடுகளோடு மீண்டும் தொடங்க அனுமதியளித்துள்ளது அம்மாநில அரசு. மேலும், சிறு குறு நடுத்தரத் தொழில்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். இந்தச் சூழலில், கேரள அரசின் இந்த நடவடிக்கை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாகக் கேரள தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்றும், கரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கேரள சுற்றுலா மற்றும் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி நாங்கள் ஊரடங்கைத் தளர்த்தி உள்ளோம். மத்திய அரசு எங்களிடம் விளக்கம் கேட்டுள்ளது. நாங்கள் விளக்கம் அளித்தவுடன், இந்த விவகாரம் சரி செய்யப்படும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இதில் எந்த முரண்பாடும் இல்லை” எனக் கூறியுள்ளார்.