இந்திய நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடங்கி வருகிறது. இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள், எழுத்துப்பூர்வமாக பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மக்களவையில், "வருடத்தின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டும் பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்கள் அதிகரிப்பதை அரசால் காணமுடிகிறதா?" என கேள்வியெழுப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், "தற்போதுள்ள தரவுகளின்படி, வருடத்தின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டும் பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த நான்கு வருடங்களாக, எந்தெந்த மாதங்களில் எத்தனை முறை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது அல்லது எத்தனை முறை ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியது என்ற பட்டியலையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, "2018 ஆம் ஆண்டில் 2,140 முறையும், 2019 ஆம் ஆண்டில் 3479 முறை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது அல்லது ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது. அதிகபட்சமாகக் கடந்தாண்டில் 5133 முறை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது அல்லது ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்தாண்டு தொடக்கம் முதல் ஜூன் மாதம் வரை 664 முறை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது அல்லது ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது" என மத்திய அரசு கூறியுள்ளது.