உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே உள்ள மோகன் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் இளைஞர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். கணவன் விட்டுச் சென்றால் விரக்தியடைந்த அந்த பெண், கடந்த 31 ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கணவன் விட்டுப் பிரிந்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று தனது சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவு சமூக வலைதளம் முழுவதும் வேகமாகப் பரவ உடனடியாக மெட்டா ஏஐ இது குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்றை உத்தரப்பிரதேச டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள சமூக வலைதள கண்காணிப்பு அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, விரைந்து சென்ற போலீசார், தற்கொலைக்கு முயன்ற பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். பின்பு பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மெட்டா ஏஐ கொடுத்த உதவியின் மூலம் தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் காப்பாற்றிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.