உத்தரப் பிரதேசத்தில் மாநகராட்சி ஆணையர் ஆசையாக வளர்த்து வந்த நாய் காணாமல் போனதால், போலீசாரை கொண்டு 500க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாநகராட்சி ஆணையராக இருப்பவர் செல்வகுமாரி ஜெயரஞ்சன். இவர் தனது வீட்டில் ஜெர்மன் செப்பெட் வகை நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது நாய் காணாமல் போயுள்ளது. அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், மீரட் மாநகர காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, ஆணையர் செல்வகுமாரி வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் நாயை தேடி சோதனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியது. மேலும் 30 மணி நேரத்திற்கும் மேலாக நாயை தேடி மீரட் மாநகர போலீசார் அலைந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் இதனை ஆணையர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நாய் காணாமல் போகவோ அல்லது திருட்டுப் போகவோ இல்லை. வீட்டின் வளாகத்தில் வளர்க்கப்பட்ட எனது நாய் திடீரென திறந்திருந்த வீட்டின் கதவு வழியாக வெளியே சென்றுவிட்டது. நாயை கண்டுபிடிக்கப் போலீசை பயன்படுத்தவில்லை. அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் வெளியே சென்ற நாயை மீண்டும் எங்களது வீட்டில் வந்து விட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரே நாளில் நடந்தது. நாயை கண்டுபிடிக்கும் படி போலீசுக்கோ அதிகாரிக்கோ எந்த உத்தரவும் கொடுக்கப்படவில்லை. வெளியே சென்ற நாயைப் பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.