உத்திரபிரதேசத்தின் உலக முதலீட்டாளர் மாநாடு லக்கனோவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, அந்த மாநாட்டில் உ.பி -யை அழகுபடுத்த மட்டும் கிட்டத்தட்ட 66 கோடி ரூபாயை தண்ணீராக செலவு செய்துள்ளது மோடிஅரசு என குற்றம்சாட்டியுள்ளார் மாயாவதி.
நேற்று முடிந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 10 நாடுகளைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் 110 நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த மாநாட்டினால் 33 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடி பங்கேற்ற இந்த மாநாட்டிற்காக உ.பி.யை அழகுபடுத்தும் பனி நடைபெற்றது. அதற்கு மட்டும் 66.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டிற்காக 22 சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டன. 12 நட்சத்திர ஹோட்டல்களில் 300க்கும் மேற்பட்ட அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.
இந்த விழாவைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அளித்த பேட்டியில், "மக்கள் பணத்தை மத்திய அரசு தண்ணீரை போல் செலவழித்து வருகிறது." என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "மக்கள் பணத்தை தண்ணீராய் செலவழிக்கவா உலக முதலீட்டாளர் மாநாட்டை நடக்கிறது? நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டத்தினால் மத்திய அரசின் மீதான விமர்சனங்களை திசை மாற்றவே இந்த மாநாடு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.