இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், டெல்லியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், டெல்லியைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப்பிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரி வகுப்பறைகள், அலுவலகங்கள் மற்றும் உள்அரங்கு கூட்டங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாகிறது.
ஏற்கனவே அமலில் இருந்த அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் அரசு திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.