இந்தியா முழுவதும் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளில் 9.5 சதவீதம் காய்கறிகள் சாப்பிடத் தகுதியற்றவை என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது. இதில் ஈயம் மற்றும் காட்மியம் போன்ற தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள் சுமார் 9.5 சதவீத காய்கறிகளில் காணப்படுவதால், இவை மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றது எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவின் சில முக்கிய மாநிலங்களில் விற்கப்படும் காய்கறிகளில் 2 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விஷம் கலந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் வளர்ந்த மற்றும் விற்கப்பட்ட காய்கறிகளில் 25 சதவீதம் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை எனத் தெரிய வந்துள்ளது. அதற்குகடுத்த இடங்களில் சத்தீஸ்கர், பீகார், சண்டிகர், மராட்டியம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் உண்பதற்கு தகுதியில்லாத காய்கறிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆய்வில் தென்னிந்தியாவை விட, வட இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளே அதிகம் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.