காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பொதுவேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இன்று (17/07/2022) மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வி.சி.க. சார்பில் தொல் திருமாவளவன், ம.தி.மு.க. சார்பில் வைகோ, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கலந்துக் கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார், "குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்" என்று அறிவித்தார்.
கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கோவா, குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.