புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவலில் உறுப்பினர்கள் கேள்வி பதில் நிகழ்வில் 'புதுச்சேரியில் அரசு அதிகாரிகளை பணி உயர்வு செய்ய தலைமை செயலாளர் தொடர்ந்து தடையாக உள்ளார்' என உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். குறிப்பாக, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையை தலைமை செயலாளர் கொடுப்பதில்லை. அதற்கு உறுதியான முடிவெடுங்கள். இல்லையெனில் சபாநாயகர் இருக்கையில் தலைமை செயலாளரே அமரட்டும்” என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ரமேஷ் ஆவேசத்துடன் பேசினார்.
இதையடுத்து, “புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை. மத்தியில் இருந்து வரும் தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் அமைச்சர்களை மதிப்பதில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் இதையே வலியுறுத்த குறுக்கிட்ட முதல்வர் ரங்கசாமி, “அதிகாரிகள் பதவி உயர்வுக்கு நான் கோப்பு அனுப்பினால் தலைமை செயலாளர் அதை திருப்பி அனுப்புகின்றார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிந்தும் பேசுகிறார்” என அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லாதது குறித்து முதல்வர் ரங்கசாமி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.