Skip to main content

“சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்” - மணிப்பூர் முதல்வர்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

manupur issue related statement manipuru cm biren singh

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் மணிப்பூரில் சற்று அமைதி திரும்பி இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

 

இந்நிலையில் மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங், சட்ட விரோத ஆயுதங்களை 15 நாட்களுக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். 15 நாட்களுக்குப் பிறகு மத்திய மாநில பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்துவர். அதே சமயம் 15 நாட்களுக்குப் பிறகு சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூரில் இயல்பு நிலை மற்றும் அமைதி திரும்ப அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்