நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மன்மோகன் சிங் ஓய்வு பெற்றாலும், நடுத்தர மக்களுக்கு, இளைஞர்களுக்கும் எப்போதுமே கதாநாயகனாகவே திகழ்வார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூகவலைதளப்பதிவில், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றிய நீங்கள் இன்று ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுவதால், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது. உங்களை விட அதிக அர்ப்பணிப்புடனும் அதிக பக்தியுடனும் தேசத்திற்கு சேவை செய்ததாக மிகச் சிலரே சொல்ல முடியும். தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் உங்களைப் போல் மிகச் சிலரே சாதித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், உங்கள் அமைச்சரவையில் அங்கம் வகித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.
நீங்கள் ஓய்வு பெற்றாலும், எப்போதும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஒரு ஹீரோவாகவும், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒரு தலைவராகவும் வழிகாட்டியாகவும், உங்களின் பொருளாதாரக் கொள்கைகளால் வறுமையில் இருந்து மீண்டு வர முடிந்த ஏழைகள் அனைவருக்கும் ஒரு பயனாளியாகவும் இருப்பீர்கள். நீங்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், நமது நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஒலிக்கும் குரலாகவே நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.