இந்திய வீரர்களின் தியாகத்திற்கு சரியான பதிலடியை தராவிட்டால் அது வரலாற்று துரோகம் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியா, சீனா இடையே நடைபெற்ற மோதல் குறித்து மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 15 ,16 ஆம் தேதிகளில் எல்லையில் நடந்த சண்டையில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்கள் நமது தாய் நாட்டிற்காகக் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் உயிர் தியாகம் வீணாகி விடக்கூடாது. நமது வீரர்களின் தியாகத்திற்கு உரிய நீதியை வழங்கிட பிரதமர் மற்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதில் சரியான நீதி வழங்கப்படவில்லை எனில், அது வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். இந்த விவகாரத்தில் இந்திய அரசின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக அமைய வேண்டும். ஏப்ரல் 2020 க்குப் பின்னர் இன்றுவரை பல ஊடுருவல்களை மேற்கொண்டு கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ ஏரி போன்ற இந்தியப் பகுதிகளுக்கு சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக உரிமைக் கோருகிறது. சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.