மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் மியான்மரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது, இராணுவம் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை 510 பேர், இராணுவத்தின் தாக்குதலில் பலியாகிவுள்ளதாகக் மியான்மர் நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மர் இராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மியான்மர் இராணுவத்தின் தாக்குதலாலும், அங்கு நடைபெறும் வன்முறை நிகழ்வுகளாலும் பாதிக்கப்பட்ட மக்கள், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். இந்தநிலையில், இந்தியாவில் மியான்மரை ஒட்டி அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் அரசு, கடந்த வெள்ளிக்கிழமை, எல்லையோர மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் மூலமாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில், மியான்மரில் இருந்து வரும் மக்களுக்கு உணவோ, இருப்பிடமோ வழங்கக்கூடாது என்றும், யாருக்கேனும் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு மட்டும் மனிதாபிமான அடிப்படியில் சிகிச்சை அளிக்கலாம் என்றும், தஞ்சம் கேட்டு வருபவர்களின் கோரிக்கையைப் பணிவாக மறுத்துவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு மனிதத்தன்மையற்றது என சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஐக்கிய நாடுகளுக்கான மியான்மர் தூதரும், மியான்மர் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும்படி இந்திய அரசுக்கும், மியான்மர் நாட்டை ஒட்டியுள்ள இந்திய மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மணிப்பூர் அரசு, இந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதாக அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மணிப்பூர் மாநில அதிகாரப்பூர்வ வாட்டரங்கள், எல்லையோர மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு மீண்டும் எழுதிய கடிதத்தில், முந்தைய கடிதத்தில் கூறப்பட்ட விஷயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன. எனவே அந்தக் கடிதம் திரும்பப் பெறப்படுகிறது. காயமடைந்த மியான்மர் மக்களை இம்பால் (மணிப்பூர் தலைநகர்) அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பது உள்ளிட்ட மனிதாபிமான செயல்களை அரசு தொடர்ந்து செய்யும். மாநில அரசு தொடர்ந்து அகதிகளுக்கு எல்லா உதவிகளையும் வழங்கும் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளன.
இந்திய அரசு ஏற்கனவே, மியான்மரில் இருந்து வருபவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்தை வழங்கக்கூடாதென்றும், மியான்மர் மக்கள், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்குமாறும் மியான்மர் எல்லையை ஒட்டிய மாநிலங்களை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.