Skip to main content

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை மக்கள் விரும்புகின்றனர்!: மாணிக் சர்க்கார்

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை மக்கள் விரும்புகின்றனர்!: மாணிக் சர்க்கார்

கடந்த இருபது ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் மாணிக் சர்க்கார். கடந்த ஆகஸ்டு 15-ஆம் தேதி, நாட்டில் ஜனநாயகம் ஒடுக்கப்பட்டு வருவதாகவும், மதவாதம் தலைதூக்கி இருப்பதாகவும் சுதந்திர தின உரையில் பேசினார் அவர். இதனை ஒளிபரப்ப அனைத்திந்திய ரேடியோ மற்றும் தூர்தர்சன் பல நிபந்தனைகளை விதித்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணிக் சர்க்கார் நாட்டின் பொருளாதாரக் கொள்கை, மாற்று அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.



சுதந்திர தினமே அரசியல் தினம்தான். அதில் நடத்தப்படும் உரை இயற்கையாகவே அரசியலாக இருக்க வேண்டும்; அப்படிதான் இருந்தது. எனது உரையில் நான் எந்த அரசியல் கட்சியைக் குறித்தும் விமர்சிக்கவில்லை. சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டினேன். ஒன்றுபட்ட சமுதாயமே நம் பாரம்பரியம். மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பின் அங்கம்; அது தாக்கப்படுகிறது. சிலர் மதத்தின் அடிப்படையிலான நாட்டை அமைத்துவிட முயற்சி செய்துவருகின்றனர். நாட்டின் பொருளாதாரக்கொள்கையில் பல மாறுதல்கள் தேவைப்படுகின்றன. நான் வேலையில்லா திண்டாட்டம் பற்றி விவாதித்தேன். இறுதியாக திரிபுரா இந்த விவகாரங்களை எளிமையாக தாக்குப்பிடித்து வருவதாக கூறினேன். இதில் என்ன தவறிருக்கிறது?

நாடு உருவானபோது மதத்தின் மீதான நடுநிலைத்தன்மை உறுதிசெய்யப்பட்டிருந்தது. மதங்களற்ற மாநிலத்தை உருவாக்கவே முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது மதத்தின் அடிப்படையில் மாநிலங்களைக் கட்டமைக்க சிலர் நினைக்கின்றனர். மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக மதத்தை முன்னிறுத்தியா தேர்தலைச் சந்தித்தது? அவர்கள் சில பொருளாதார வாக்குறுதிகளை முன்வைத்தனர். வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என்றனர். விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்துவோம், கறுப்புப் பணத்தை ஒழித்து வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை நாட்டிற்குக் கொண்டுவந்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் கொடுப்போம் என்றார்கள். அவர்களது வாக்குறுதிகளில் அப்போது மதம் இல்லையே? பாஜக-விற்கு வாக்களித்த 31% பேர் மதத்தைக் காரணமாக வைத்துதான் வாக்களித்தார்கள் என்று நினைப்பதா? 

காங்கிரஸோ, பாஜகவோ யாரொருவரும் யாருக்கும் மாற்று கிடையாது. அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். பாஜக இனவாத அரசியலை முன்னெடுக்கிறது. அவர்களை எதிர்க்கும் அளவிற்கு காங்கிரஸ் வலிமை வாய்ந்ததாக இல்லை. பாஜக-விற்கும் காங்கிரஸ்-க்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. பொருளாதாரகத்தில் மாற்றுக்கொள்கையை முன்வைக்கும் எங்களை மக்கள் விரும்புகின்றனர்.

மக்கள் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை விரும்புகின்றனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களின் அந்த ஒருங்கிணைப்பு வெறும் பேச்சுவார்த்தையாக இல்லாமல், மாற்று பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கவேண்டும். அவர்கள் இந்த ஒருங்கிணைப்பின் தேவை குறித்து விளக்க வேண்டும். அவர்கள் மக்களைச் சந்தித்து, இந்த ஒருங்கிணைப்பின் நோக்கம் மற்றும் கொள்கைகள் குறித்து பேசவேண்டும். திரிபுரா மாநிலத்தில் பாஜக சூழ்ந்திருப்பதாக சொல்கிறீர்கள். தேர்தலில் சந்திப்போம் என்பதே என் பதில்’ என்கிறார் உறுதியாக.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்