டெல்லி நங்கலோய் காவல்நிலையத்தில் காவலராக சந்தீப் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சந்தீப் நேற்று நள்ளிரவில் சாதாரண உடையில் ரோந்துபணி மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வேகமாக கார் ஒன்று சென்றுள்ளது. அதிவேகமாகச் சென்ற காரை துரத்திப் பிடித்த காவலர் சந்தீப் காரில் வேகமாகச் செல்ல வேண்டாம்; மெதுவாகச் செல்லுங்கள் என்று அறிவுரைக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காரின் ஓட்டுநர் சந்தீப்பின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். அப்போது வாகனமும், சந்தீப்பும் காரில் சிக்கியுள்ளனர். ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் வேகமாக காரை ஓட்டுநர் ஓட்டிச்சென்றுள்ளார். பின்னர் அவர் மீது காரை ஏற்றுவிட்டு அந்த ஒட்டுநர் காருடன் தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தீப்பை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு சந்தீப்பைப் பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவத்தின் போது காரில் இரண்டு நபர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார் இரண்டு பேரில் ரஜ்னிஷ் என்பவரைக் கைது செய்துள்ளனர். காரை ஓட்டியவர் தலைமறைவாக இருப்பதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.