ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் ராம் சரண். இவர் தற்போது ஒடிசா மாநிலம் பூடாவ் பஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார். ராம் சரணுக்கு சமீபத்தில் குண்டூரில் இருந்து பார்சல் ஒன்று வந்துள்ளது. இதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், வீட்டின் மாடியில் அமர்ந்துகொண்டு பார்சலை ஆர்வத்துடன் திறந்து பார்த்துள்ளார். அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்துள்ளன. அதை ஒவ்வொன்றாக வெளியே எடுத்த போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பார்சலின் அடியில் இருந்து 4 அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று திடீரென்று எழுந்து பார்சலுக்கு வெளியே தலையை நீட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், விஷப் பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ராம் சரண் உடல்நிலைக் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பார்சலை கொடுத்த நிறுவனத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.