பாஜக ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் நடக்குமோ என்று உத்தரப்பிரதேச மக்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் இஸ்லாமிய மாநாடு ஒன்றை சீர்குலைப்பதற்காக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த விஎச்பியும், பஜ்ரங் தளமும் திட்டமிட்டன.
அதாவது, அந்த மாநாட்டில் பங்கேற்போர் உணவுக்காக மாடுகள் கொல்லப்படுவதாக புகார் கூறினார்கள். விசாரணையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சியானா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கும், உள்ளூர் இளைஞர் சுமித் குமார் என்பவரும் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அந்த இன்ஸ்பெக்டரை இந்து விரோதி என்று முத்திரை குத்திய விஎச்பி அமைப்பினர், ஒரு டிராக்டரில் மாட்டிறைச்சியை ஏற்றிவந்து போலிஸ் நிலையம் முன்பாக நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில்தான் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கையும், சுமித் குமார் என்ற இளைஞரையும் மாட்டுக்குண்டர்கள் தீவைத்து கொன்றார்கள். இதுகுறித்து மாநில பாஜக அரசு எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டு காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடையாளம் தெரிந்த 27 பேரும் அடையாளம் தெரியாத 60 பேரும் இந்த வன்செயலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் ராணுவவீரர் உள்ளிட்ட 7 பேர் திடீரென்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட கடுமையான புகார்கள் இல்லை என்று போலீஸார் சமாதானம் கூறினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சிறை வாசலில் இவர்களை வரவேற்க பாஜகவினர் திரண்டு வாழ்த்து முழக்கமிட்டார்கள். வந்தேமாதரம், பாரத் மாதாக்கீ ஜே போன்ற கோஷங்களை எழுப்பிய அவர்கள், 7 பேர் விடுதலைக்காக விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.