கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தக் காலகட்டத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய ஏழு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இன்று காலை நாட்டு மக்களிடம் இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் மோடி மக்கள் பின்பற்றவேண்டிய ஏழு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார். அவை,
1.உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களை, குறிப்பாக உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
2.வெளியே வரும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். முகக் கவசங்களை வீட்டிலேயே கூடத் தயாரித்து அணிந்து கொள்ளலாம்.
3.ஆயுஷ் அமைச்சகம் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
4.'Aarogya Setu' செயலியைப் பதிவிறக்கம் செய்து கரோனா பரவல் குறித்துத் தெரிந்து கொண்டு பரவலைக் குறைக்க வேண்டும்.
5.முடிந்தவரை ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள்
6.உங்கள் தொழிலில், உங்கள் சக ஊழியர்களுக்கு உதவுங்கள். ஆட்குறைப்பு செய்யாதீர்கள்
7.கரோனா வைரசை எதிர்த்து நிற்கும் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.