செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிக்கும்போது, அதனைப் பயன்படுத்திக் கொண்டே பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேஷ் பால் காங்வார், 30. இவர் பொறியியலாளராக பணியாற்றி வந்துள்ளார். இன்று மாலை இவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், காலை வெளியில் சென்று வருவதாக கூறி கிளம்பியுள்ளார்.
அந்தப் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை செல்போனில் பேசியபடியே கடந்தவர், அந்த வழியே வந்த ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ‘காங்வார் ஒரு செல்போனில் பேசிக் கொண்டும், மற்றொன்றை பார்த்துக்கொண்டும் நடந்தார். நாங்கள் தடுக்க முயன்றும் அவர் எங்களைக் கவனிக்காமல் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார்’ என தெரிவித்துள்ளனர்.
திருமண தினத்தன்றே ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த தகவலைக் கேட்ட காங்வாரின் உறவினர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. காங்வார் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தற்செயலான விபத்தா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.