பெட்ரோல்-டீசல் விலை இந்தியா முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்ததுடன், டீசல் விலையும் நூறை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"பொதுமக்களுக்கு துன்பத்தை விளைவிக்கும் மத்திய அரசின் கொள்கைகள் குறித்து உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்" எனத் தனது கடிதத்தில் கூறியுள்ள மம்தா, "மே 4 முதல் உங்களது அரசு 8 முறை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 6 முறை விலை ஏற்றப்பட்டுள்ளது. அதில் ஒரே வாரத்தில் நான்கு முறை விலையேற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். இந்த கொடுமையான பெட்ரோல், டீசல் விலை பொது ஜனங்களை பாதிப்பதோடு, அபாயகரமாக உயர்ந்து வரும் பணவீக்கத்தில் நேரடியாகப் பாதிக்கிறது. பொது மக்களுக்குத் துயரத்தை விளைவிக்கும் வகையிலான கொள்கைகளைச் செயல்படுத்துவதற்காக உங்களிடம் எனது கவலையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து "2014 -15 ஆண்டிலிருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களில் இருந்து மத்திய அரசு பெறும் வரி 350 சதவீதம் அதிகரித்துள்ளது" எனக் கூறியுள்ள மம்தா, "மத்திய வரி வருமானத்தில் செஸ் கூறை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே செல்வது மாநிலங்களுக்கு சட்டப்படி வழங்கவேண்டிய 42 சதவீத பங்கை மறுப்பதில் போய் முடிகிறது. கடந்த சில வருடங்களாக உருவாகியுள்ள இந்த கூட்டாட்சிக்கு எதிரான போக்கை நீங்கள் தவிர்க்க வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மம்தா, பெட்ரோல் -டீசல் விலையைக் கணிசமாகக் குறைத்து பொதுமக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டுமென்றும், நாட்டில் இன்றுள்ள பணவீக்கம் குறித்து ஆராயுமாறும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.