நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறுகிறது.
இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, “மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி இன்று வரை அங்கு கலவரம் நீடித்து வருகிறது. நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? அவர் மணிப்பூருக்குப் பயணித்து அங்கு மக்கள் அடையும் வேதனையைக் காண வேண்டும்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, அரசியல் சாசனத்துக்கு அடித்தளம் அமைத்தவர். அதன் அடிப்படையில் தான் நாடாளுமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளை அரவணைத்துச் செல்லும் கண்ணோட்டத்தைக் கொண்டவர். ஆனால், இன்றைய ஆட்சியில் எதிர்க்கட்சிகள் வலுப்பெற்று இருந்தாலும், அவற்றைப் பலவீனப்படுத்துவதற்காக சி.பி.ஐ. அமலாக்கத்துறை போன்ற துறைகளை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி, அதிக நேரம் பேசுகிறார். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் பேசுவதை அவர் தவிர்த்து விடுகிறார். எப்போதாவது நாடாளுமன்றத்துக்குள் வரும் பிரதமர் மோடி, சம்பிரதாய உரைகளைத் தாண்டி வேறெதுவும் பேசுவதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயகம் வலுப்பெற்றதோடு மட்டுமல்லாமல் அரசியல் சாசனம் உயிர்ப்போடு இருந்தது. ஆனால், இப்போது அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று பேசினார்.