ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர்.
இந்த மாநாட்டைத் தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடு இந்தியா என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களைக் கவரும் விதமாக உணவு ஏற்பாடுகளும் சிறப்பான வகையில் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவுகள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, உலகத் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்காகத் தயாராகின்றன.
பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை பிரபலமான தாஜ் ஹோட்டல் ஏற்றுள்ளது. இந்த ஹோட்டலில் இருந்து 120 சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, ஜி-20 பிரதிநிதிகளுக்காக சுமார் 500 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன. அதில், ஒவ்வொரு நாளும் 170 உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன. அதில், பானிபூரி, சாட் போன்ற இந்தியாவில் பிரபலமான தெரு உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகளும் பிரத்யேமாக தயாரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, திணை தாலி, திணை புலாவ் மற்றும் திணை இட்லி, திணை சூப் போன்ற திணை உணவுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும், தென் இந்திய மசாலா தோசை, ராஜஸ்தானின் தால்பாடி, சுர்மா, பீகாரின் லிட்டி சோக்கா, பெங்காலி ரசகுல்லா, டெல்லி சாட், மஹாராஸ்டிராவின் பாவ் பஜ்ஜி, தமிழகத்தில் இருந்து பனியாரம் எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபலமான உணவுகள் தயாரிக்கப்பட இருக்கின்றன. மேலும், அசைவ உணவுகளான சிக்கன் கோலாபூரி, இந்தியன் மீன் குழம்பு, கோழிக்கறி போன்ற உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உணவுக்கு பேர் போன செட்டிநாடு பகுதியில் இருந்து செட்டிநாடு சிக்கன் உணவையும் ஜி20 பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. மேலும், பல்வேறு இடங்களில் உள்ள பிரபலமான அசைவ உணவுகளும் தயாரிக்கப்பட இருக்கின்றன. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாத்திரங்கள், ஜெய்ப்பூர், உதய்பூர், வாரணாசி மற்றும் கர்நாடகா உள்படப் பல இடங்களில் உள்ள பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகின்றன.