உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உட்பட 10 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளனர். இந்த வருட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8- வது இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் இன்று பகல் 03.00 மணியளவில் ரோஸ் பவுல், சௌதாம்ப்டன் மைதானத்தில் மோதுகின்றன. இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மாலை 06.00 மணியளவில் ஓவல், லண்டன் மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை மொபைலில் பார்க்கும் வகையில் ஜியோ நிறுவனம் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் ஹாட் ஸ்டார் அல்லது ஜியோ டிவியில் இலவசமாக போட்டிகளை காணலாம். அதற்கு டேட்டா கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதை தவிர ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 251 ரூபாய்க்கு சிறப்பு டேட்டா பேக் அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த டேட்டா பேக்கில் 51 நாட்களுக்கு 102 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதன் மூலம் உலகக்கோப்பையின் அனைத்துப் போட்டிகளையும் முழுவதுமாக ஜியோ வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும். மேலும் "MY JIO" மொபைல் செயலியில் ஜியோ வாடிக்கையாளர்களும், மற்ற வாடிக்கையாளர்களும் இடையே போட்டி நடத்தப்படும். போட்டிகள் நடக்கும் போதே போட்டி தொடர்பான கேள்வி எழுப்பப்படும். அப்போது கேள்விக்கு உடனடியாக சரியான பதிலளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.