புதுச்சேரி நெல்லித்தோப்பு சின்னகொசப்பாளையத்தை சேர்ந்தவர் பாசு (வயது46). இவர் புதுவை லட்சுமி நகரில் கம்ப்யூட்டர் ஆப்செட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு முத்தியால்பேட்டையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவரிடமிருந்து ரூ.40 ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வந்தார். பாசு தனது உறவினரை பேருந்தில் ஏற்றி விட மோட்டார் சைக்கிளில் அவரை புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தார். அங்குள்ள ஓட்டல் அருகே பாசு மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு திருப்பதி செல்லும் பேருந்தில் உறவினரை ஏற்றி வழியனுப்பிவைத்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து அதனை தள்ளி செல்வதை கண்டு பாசு 'திருடன் திருடன்' என அலறல் சத்தம் போட்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அதில் ஒருவன் தப்பியோடி விட்டான். மற்றொருவன் சிக்கிக் கொண்டான். இதையடுத்து பிடிபட்ட திருடனை பாசு உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த முஜிபுல்லா(25) என்பதும், தப்பி ஓடியவன் அதே பகுதியைச் சேர்ந்த காசிம் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் திருபுவனை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் தங்கி சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே திருட்டு மற்றும் கொலை வழக்கும் உள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முஜிபுல்லாவை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய காசிமை தேடி வருகிறார்கள்.