இந்தியா தலைமையில், டெல்லியில் நேற்றும், நேற்று முன் தினமும் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். நேற்றைய ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலகத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அத்தோடு, உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வர வேண்டும், 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளப் பக்கத்தில், மோடியை தாக்கி பல கேள்விகளை கேட்டு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜி-20 உச்சி மாநாடு முடிந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தற்போது உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ஒரு பொதுவான தட்டு உணவின் விலை 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல், நாட்டில் வேலையின்மையால் 8 சதவீத இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது. சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் மோடி அரசின் தவறான நிர்வாகம் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
அதே போல், ஜம்மு காஷ்மீரில் ரூ.13,000 கோடி ஜல் ஜீவன் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், ஒரு பட்டியலின வகுப்பைச் சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் அவர் சித்திரவதை செய்யப்பட்டார். பிரதமர் மோடியின் உற்ற நண்பரின் கொள்ளை சமீபத்தில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் இருந்து ரூ.3 லட்சம் கோடி பணத்தை மோடி அரசுக்கு மாற்ற வேண்டும் என்று அரசின் அழுத்தத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைக் கவர்னர் விரால் ஆச்சார்யா எதிர்த்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை நடந்துள்ளது. அதே போல், இமாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், திமிர் பிடித்த மோடி அரசு அதை பேரிடராக அறிவிப்பதை தவிர்த்து வருகிறது. இத்தனைக்கும் மத்தியில் பிரதமர் மோடி உண்மையை மறைக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார். ஆனால் மோடி அரசின் கவனத்தை சிதறடிக்கும் பிரச்சனைகளுக்கு பதிலாக உண்மையைக் கேட்கவும் பார்க்கவும் பொதுமக்கள் விரும்புகிறார்கள். அதனால், மக்கள் சொல்வதை மோடி அரசு கவனமாகக் கேட்க வேண்டும். 2024 இல் நீங்கள் புறப்படுவதற்கான பாதையை பொதுமக்கள் அமைக்கத் தொடங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.