Skip to main content

“இந்தியா கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும்” - மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
Mallikarjuna Kharge believes India alliance will definitely form the government

பாராளுமன்ற தேர்தலின், ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கும் நிலையில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (01-06-24) துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் 30-05-24 அன்று மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்கிடையே, ஜூன் 1ஆம் தேதி அன்று முக்கிய ஆலோசனை நடத்த இந்தியா கூட்டணி கட்சியினருக்குக் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நாளை மாலை 3 மணி போல் அவரது தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், இன்று (01-06-24) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அகிலேஷ் யாதவ், சரத்பவார், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கமளித்தார்.

Mallikarjuna Kharge believes India alliance will definitely form the government

இது குறித்து மல்லுகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து விவாதம் நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து ஆலோசனையில் விவாதித்தோம். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து இந்தியா கூட்டணி கட்சியினர் வெளியே வரக்கூடாது. இந்தியா கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பான விவாதங்களில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும்” என்று கூறினார்.  

டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தி.மு.க எம்.பியும், பொருளாளருமான டி.ஆர்.பாலு பங்கேற்றுள்ளார். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இறுதிக்கட்ட தேர்தல் மற்றும் புயல் பாதிப்பு காரணமாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்